handsake-300x246 அன்பு கொள்வது மனித இயல்பு. அவ்வன்பு சில நேரம் கடமையாகவும் இன்னும் சில நேரங்களில் ஸுன்னத்தாகவும் வேறு சில பொழுதுகளில் ஹறாமானதாகவும் அமைந்து விடும். இஸ்லாத்தின் மூல மந்திரமாகிய லா இலாஹ இல்லல்லாஹ் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த இறைவனும் இல்லை என்பதை வலியுறுத்தி நிற்கின்றது. இக்கலிமாவில் காணப்படும் இலாஹ் என்ற அரபுச்சொல் வணங்கி, வழிபட, அன்பு செலுத்த, சட்டமியற்ற, படைத்துப் பரிபாலிக்க, துஆக்களை அங்கீகரிக்க மற்றும் தேவைகளை நிறைவேற்றத் தகுதியானவன் அல்லாஹ் மட்டும் தான் என்பதை எடுத்துரைக்கிறது. இங்கு அல்லாஹ்வின் மீது மட்டுமே அன்பு செலுத்த வேண்டுமென்றும் அவன் மட்டுமே அதற்குத் தகுதியானவன் என்றும் அவனது வேறு எந்த படைப்பினங்கள் மீதோ அன்புச் செலுத்த வேண்டுமானால் அவனுக்காகவே அன்பு செலுத்தப்பட வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ‘யார் அல்லாஹ்வுக்காக நேசிக்கின்றாரோ, அல்லாஹ்வுக்காக வெறுக்கின்றாரோ, அல்லாஹ்வுக்காக கொடுக்கின்றாரோ, அல்லாஹ்வுக்காக கொடுக்காமல் இருக்கின்றாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக் கொண்டார். (அபூதாவூத்-4061) அல்லாஹ்வின் பொருட்டு அன்பு பாராட்டுதல் என்ற பகுதிக்குள் ஒரு மனிதர் பிற மனிதர்களுடன் அன்பு காட்டுதல், உயிரினங்கள் மீது அன்பு காட்டுதல் என்பனவும் அடங்கும். இப்பின்னணியில் இஸ்லாத்தின் பார்வையில் நட்பு, தோழமை போன்ற சொல்லாடல்களைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும். நபி (ஸல்) ‘உங்களில் ஒருவர் தனது பிள்ளைகள் பெற்றோர் உலகிலுள்ள அனைவரையும் விட என்னை நேசிக்காத வரை ஈமான் கொண்டவராக ஆகமாட்டார் எனக்கூறினார்கள். இங்கு அல்லாஹ்வின் தூதரின் மீது அன்பு வைப்பதனை அவசியமாகின்றது. நபி (ஸல்) அவர்களிடம் அம்ர் இப்னு ஆஸ் (ரழீ) மனிதர்களில் உங்களுக்கு விருப்பமானவர் யார் எனக் கேட்ட போது, அதற்கு நபி (ஸல்) அவர்கள் தன் மனைவி ஆயிஷா (ரழி) என பதிலழித்தார்கள். இங்கு ஒரு மனிதர் தனது மனைவி மீது அன்பு வைப்பதன் அவசியம் உணர்த்தப்படுகிறது. அதே நேரம் நபி (ஸல்) அவர்களிடம் ஆண்களில் உங்களுக்க விருப்பமானவர் யார் எனக் கேட்டபோது அதற்கு ஆயிஷாவின் தந்தை அபு பக்கர் (ரழி) எனப் பதிலழித்தார்கள். இது நண்பனை நேசிப்பதன் அவசியத்தை விளக்குகிறது. இந்த வகையில் நட்பு என்பது இஸ்லாமிய வாழ்வொழுங்கில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. முஸ்லிம்களுக்கிடையிலான நட்பின் அவசியத்தை உணர்த்த வந்த நபி (ஸல்) அவர்கள் மனித உடலை உதாரணமாகக் குறிப்பிட்டார்கள். உடலில் ஒரு பகுதியில் வேதனை ஏற்படும் போது, அந்த வேதனை உடலின் ஏனைய உடல் உறுப்புக்களையும் தாக்குகிறது. இதே போன்று ஒரு நண்பனுக்கு ஏற்படும் இன்ப, துன்பமானது அவனது நண்பனுக்கும் தாக்கம் செலுத்துவதாக அமைய வேண்டுமென்பதை நபிகளாரின் இந்த கூற்று தெளிவுபடுத்துகிறது. நட்புக்கும் நற்பண்புக்குமிடையில் மிக நெருங்கிய உறவு காணப்படுகிறது. இதனால் தான் நட்பு கொள்ள நாடும் ஒருவர் தனது நண்பனைத் தெரிவு செய்கின்ற போது, அவர் பெற்றிருக்க வேண்டிய ஆளுமைப் பண்புகள் விடயத்தில் கவனம் செலுத்துமாறு நபி (ஸல்) பிரஸ்தாபித்தார்கள். நல்ல பண்புகளை அணிகலன்களாகக் கொண்ட ஒரு மனிதனையும் துர்நடத்தைகளை இழி பண்பாகக் கொண்ட ஒரு மனிதனையும் ஒப்பிட்டு நோக்கும் அண்ணலார் இவ்வாறு கூறினார்கள் “நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரி போலாவான். இன்னும் தீய நண்பன் துருத்தி ஊதுபவன் போலாவான். கஸ்தூரி வியாபாரி உனக்கு அதை இலவசமாக தரக்கூடும் அல்லது அதன் நறுமணத்தை நீ நுகரக்கூடும் துருத்தி ஊதுபவன் உனது ஆடையை எரித்து விடக்கூடும் அல்லது அவனிடமிருந்து துர் வாடையை நீ நுகர நேரிடும். (புஹாரி) தற்காலத்தில் நட்பு என்ற வரையறைக்குள் காதலைத் தொடர்புபடுத்துவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. பாடசாலைகள் முதல் பல் கலைக்கழகம் வரை நீடித்திருக்கும் ஆண், பெண் கலப்பானது பல்வேறு ஒழுக்கச்சீர்கேடுகளை சமூகத் தளத்தில் ஏற்படுத்திருப்பது மறுக்க முடியாத உண்மை. பருவ வயதையடைந்த ஆண், பெண் ஒவர் மற்றவர் மீது அன்பு செலுத்த முனைவது இறைவன் ஏற்படுத்திருக்கும் விதியாகும். இது உடலில் ஏற்படும் ஓமோன்களின் மாற்றங்களின் விளைவு என்கிறது மருத்துவ உளவியல். ஆண், பெண் இருபாலாரும் எதிர்ப்பால் உணர்ச்சியால் உந்தப்படும் பொழுது அது நட்பாக தோற்றம் பெற்று, காதலாக உருவெடுத்து, இறுதியில் காமத்தில் போய் முடிவதை நாம் காணலாம். தற்கால உலகில் பாரியதோர் சமூகச்சீர்கேடாக ஆற்பரித்திருக்கும் இக்காதல் கலாசாரமானது, இஸ்லாத்தின் பார்வையில் விபசாரமாகவே கருதப்படுகின்றது. ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பு அன்னியொன்னியமாகப் பழக முடியாது. அது நட்பு என்ற போர்வையில் நேரில் பேசுவதாக இருக்கலாம். அல்லது தொலைபேசியூடாக குழைந்து குழைந்து பேசுவதாக இருக்கலாம். இது தவிர, நவீன தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பவதாக இருக்கலாம், அதேபோல் Facebook மற்றும் Skype போன்ற வளையதளங்கள் ஊடாக அரட்டை அடிப்பதாக இருக்கலாம். இதனை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே மஹ்ரமி-அஜ்னபி என்ற ஆண், பெண் உறவு அமைய வேண்டிய பிரிகோட்டின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் நட்புக் கொள்வதையோ மற்றும் கணவன்-மனைவி காதல் கொள்வதையோ இஸ்லாம் மறுக்கவில்லை. எனவே தான் நட்பு என்ற எண்ணக்கருக்குள் காதல் என்ற கருத்தாடலைத் தொடர்புபடுத்தி நட்பை கொச்சைப்படுத்தாமல் அல்லாஹ்வுக்காக இம்மையில் நட்பு கொண்டு நாளை மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் நிழல் பெறும் பாக்கியத்தை அடைவோமாக!

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top