11825624_10207667864394080_7095085001959666096_n-minகிடைத்திருக்கின்ற ஓரிரு தேசியப்பட்டியலுக்காகவும், கிடைக்கவிருக்கின்ற அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகளுக்காகவும் நாம் உள்ளக முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாது, புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுதல் வேண்டும். அதே போன்று ஹகீம், ரிஷாத் அணிகளுக்கிடையில் கட்சி, தேர்தல், அரசியலுக்கப்பால் தேசிய அரசியலில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவதன் அவசியத்தை கடந்த காலங்களில் நாம் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்கள் உணர்த்துகின்றன. புத்தளம் மாவட்ட முஸ்லிம்களுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை அமைச்சர் ரிஷாத் பெற்றுக் கொடுத்திருக்கின்றமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரை, ஏற்கனவே பலதடவைகள் தேசியப்பட்டியலைப் பெற்றவர்கள் அல்லது கட்சியின் அனுசரணையில் பல தடவைகள் பாராளுமன்றம் சென்றவர்களுக்கு இம்முறை தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்ல என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மு.கா. தலைவர் அமைச்சர் ஹகீம் அவர்களது சகோதரர் அப்துல் ஹபீஸ் மற்றும் அவரது பிரத்தியேக சட்ட ஆலோசகர் ஸல்மான் ஆகிய இருவரும் தற்காலிகமாக (UNP) நியமிக்கப் பட்டிருந்தாலும் தேசியப்பட்டியல் பகிர்வு குறித்த முடிவு எட்டப்பட்டவுடன் அவர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள். கிழக்கிலங்கையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை செய்து கொண்ட உடன்பாடுகள் இந்த தேர்தலோடு மட்டுப்படுத்தப்பட்டு விடாது, சமூகத்தளத்தில் குறிப்பாக, புதிய தலைமுறையினர் மத்தியில் நல்லாட்சி எண்ணக்கருக்களை மேம்படுத்தும் புதிய அரசியல் பாதையில் இன்னும் பல மைல் கற்களை தாண்டுதல் வேண்டும். கம்பஹா, குருணாகல், களுத்துறை மாவட்ட முஸ்லிம் மக்களும் தமக்கான பிரதிநிதிகளைப் பெற முயன்று தோற்றுப்போயுள்ளனர், குறைந்த பட்சம் அந்த வகையில் அரச இயந்திரத்தில் அதிகாரமுள்ள பதவிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். எது எப்படிப் போனாலும், குருணாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் வரை தமது பிரதிநிதிகளை வென்றெடுக்கக் கூடிய வியூகங்களை கைவிட்டு விடாது இன்னும் பரந்துபட்ட அடிப்படைகளில் கற்றுக் கொண்ட பாடங்களின் ஒளியில் PPAF போன்ற பிரதேச சக்திகள் முன்னெடுத்தல் அவசியமாகும். குருணாகல் மாவட்டத்தில் ஜனாதிபதியின் (SLFP -UPFA) சுதந்திரக்கட்சி- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றிருப்பதால், அவர்களது தேசியப்பட்டியலில் பைசல் முஸ்தபா போன்ற ஒருவர் தெரிவு செய்யப்படின், அந்த மாவட்டத்திற்குப் பொறுப்பாக நியமனம் செய்யப்படின் சிறந்தது. தமக்கென பிரதிநிதிகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்திற்கப்பால் அடுத்த சமூகங்களைச் சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்கும், அடுத்த சமூகங்களுடனான புரிந்துணர்வை, சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் சாதகமான அனைத்து நடவடிக்கைகளையும் அவ்வப்பிரதேச உள்ளூர்த்தலைமைகள் மேற்கொள்ளுதல் வேண்டும். இன, மத, மொழி, பிரதேச, கட்சி முரண்பாடுகளுக்கப்பால் தேசிய அரசியலில் எம்மை சரியான பரிமாணங்களில் இணைத்துக் கொண்டு புதிய அரசியல் பாதையொன்றில் தேசத்திலுள்ள சகல முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து பயணிக்க வேண்டிய கட்டாய நிலையில், கடப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, கலாசார, தேசிய நலன்கள் சார்ந்த பல்துறைப் பரிமாணங்களையும் உள்வாங்கிய தெளிவான சிந்தனைப் பாரம்பரியமொன்றை நோக்கிய பயணத்தில் தேசத்திலுள்ள சகல முற்போக்கு சக்திகளையும் அரவணைத்துக் கொண்டு முன் செல்வதற்கான சாதகமான சாத்தியப்பாடுகள் தேசத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுடன் அதிகரித்துக் காணப்படுகின்றன.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top