இலங்கையின் 15வது பாராளுமன்றத்தேர்தல் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெறும் இத்தேர்தல் தேசியரீதியிலும் சர்வதேசரீதியிலும் கவனிப்புக்குரிய தேர்தலாக மாற்றமடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இத்தேர்தலில் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுவதால் நடைபெறவுள்ள தேர்தல் நிச்சயமாக தெவிட்டாத ஒரு விறுவிறுப்பான தேர்தல் முடிவாகவே அமையும் என்பதை நாம் ஆரம்பத்திலே எதிர்வு கூறலாம். ஓட்டுமொத்த பிரதேசவாதமும் இனவாதமும் இத்தேர்தலில் பிரதானமான பிரசார தலைப்புக்களாக மாறியுள்ளதை சமகால தேர்தல் பிரசாரங்களினூடாக அவதானிக்க கூடியதாகவுள்ளது. இந்த பிரதேசவாதம், இனவாதம் என்ற பிரசாரங்களுக்கு மத்தியிலிருந்து கொண்டு தான் பாராளுமன்றப் பிரதிநிதிகளின் தெரிவையும் நாம் கணிப்பிடக் கூடியதாக இருக்கும் என்றால் அது மிகையில்லை. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டமும் தற்போது கவனிப்புக்குரிய மாவட்டமாக மாறியுள்ளது. நாளுக்கு நாள் தேர்தலில் சூடு நிறைந்த மாவட்டமாகவும் அடிக்கடி கள நிகழ்வுகள் மாற்றமடையும் மாவட்டமாகவும் காட்சியளிக்கின்றது. இம்மாவட்டம் 5 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மாவட்டமாகும். இதில் 4 பேர் தமிழர்களாகவும் ஒருவர் முஸ்லிமாகவும் அல்லது மூன்று பேர் தமிழர்களாகவும் 2 பேர் முஸ்லிம்களாகவும் தெரிவாகிய தேர்தல் முடிவுகளை கடந்த காலங்களில் அவதானிக்கலாம். Year Party TNA SLMC UPFA UNP 2000 Votes 54448 - 53646 29165 Seat 3 - 1 1 2001 Votes 86284 26725 - 22638 Seat 3 1 - 1 2004 Votes 161011 43131 26268 6151 Seat 4 1 - - 2010 Votes 66235 - 62009 22935 Seat 3 - 1 1 அந்த வகையில் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை இரண்டா அல்லது ஒன்றா என்பது பற்றியும், அவ்வாறு தெரிவாகும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் யாராக இருக்கலாம்? எந்த கட்சியாக இருக்கலாம்? என்பதை பற்றிய ஒரு கள ஆய்வை மேற்கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இம்மாவட்டம் மூன்று தேர்தல் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, பட்டிருப்பு மற்றும் கல்குடா தேர்தல் தொகுதிகளே அவையாகும். இம்மாவட்டத்தை பொறுத்த வரையில் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் கல்குடா தொகுதியிலிருக்கும் முஸ்லிம் பிரதேசங்கள் என்பன முஸ்லிம் வாக்காளர்களைக் கனதியாகக் கொண்ட பிரதேசங்களாகும். அந்தவகையில், காத்தான்குடிப் பிரதேசத்தில் 29000 முஸ்லிம் வாக்காளர்களும் ஏறாவூர் பிரதேசத்தில் 23000 முஸ்லிம் வாக்காளர்களும் கல்குடாத்தொகுதியில் 34000 முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றது. இந்த வாக்காளர்களின் கணிப்பின் படி இம்மாவட்டத்தில் கூடுதலான முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கல்குடாத்தேர்தல் தொகுதி காணப்படுகின்றது. 2014ம் ஆண்டு நடைபெற்ற வாக்காளர்களின் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தில் 365167 பேர் வாக்களிக்க தகுதிபெற்றவர்களாக காணப்படுகின்றனர். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக 333644 பேர் காணப்பட்டனர். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்காளர் கணக்கெடுப்பின் படி 31532 பேர் புதிதாக வாக்களிக்க தகுதிபெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இம்மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளிலிருந்தும் 30 சுயேட்சைக் குழுக்களிலிருந்தும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்வதற்காக 388 பேர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இங்கு நான்கு பிரதான கட்சிகள் களத்தில் குதித்துள்ளதை அவதானிக்கலாம். அந்த வகையில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் ஆகியோரும் ஐக்கிய தேசிய கட்சியில் பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி ஆகியோரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் கணக்கறிஞர் றியாழ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல முக்கிய அரசியல்வாதிகள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பில் இக்கட்டுரை எழுதப்படுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் தொடர்பில் அழுத்தி எழுத முடியாமையை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும். தமிழ் தேசிய கூட்டமைப்பு : நான் மேற்குறிப்பிட்டது போன்று தனி அடையாள அரசியல் பற்றி தமிழ் மக்கள் அதிகமாக சிந்திக்கும் போது அல்லது இனவாதப் பிரசாரத்தின் தாக்கம் தமிழ் மக்களை கவர்ந்து அவர்களின் வாக்களிப்பு வீதம் 56 வீதத்தை தாண்டும் போது 4 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு காணப்படுகின்றன. இவை சாத்தியப்படுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாம் அண்மையில் நடந்த தேர்தல் முடிவுகளையும் சற்று அலச வேண்டியுள்ளது. அதன்படி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேனா 81 வீதமான வாக்களிப்பினை பெற்று 209422 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ச 16 வீதமான வாக்களிப்பினை பெற்று 41631 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கெதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டியிருந்தும் மஹிந்த ராஜபக்சவுக்கு 41631 வாக்குகள் கிடைத்தது கவனிப்புக்குரியது. இந்த வாக்களிப்பினை தொகுதி ரீதியாக அவதானித்தால் கல்குடா தேர்தல் தொகுதியில் 10337 வாக்குகளும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 8216 வாக்குகளும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 21473 வாக்குகளும் மஹிந்தவுக்கு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதே போன்று, 2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 7878 வாக்குகளும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 35089 வாக்குகளும் கல்குடா தேர்தல் தொகுதியில் 16786 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தலில் 36 வீதமான செல்வாக்கை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு 65235 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை பெற்றுக் கொண்டது. அதே நேரம் 62009 வாக்குகளை பெற்று சுமார் 34 வீதமான வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கெதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்று கொண்டதுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, 2004 ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு 66 வீதமான வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. அவ்வாறான நிலை இம்முறை தேர்தலிலும் எட்டப்பட்டால் அல்லது 56 வீதத்திற்கும் கூடுதலான தமிழ் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றால் 4 ஆசனங்களைக் கைப்பற்றும் மீதி ஒரு ஆசனம் முஸ்லிம் பிரதிநிதித்துவமாக அமையும். அவ்வாறில்லாத பட்சத்தில் 56 விதத்துக்கு குறைவான தமிழ் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றால் அத்தேர்தல் முடிவு 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முடிவாக அமையும் தமிழ் பிரதிநிதித்துவம் 3 ஆகவும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 2 ஆகவும் அமையும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான பெருத்த வாக்களிப்பு வீதத்தினை பெறுவது என்பது சமகால அரசியல் நிலைமைகளினூடாக கடினமான விடயமாக மாறியுள்ளதை அவதானிக்கலாம். இறுக்கமான தமிழ் தேசிய வாதக்கொள்கையிலிருந்து விடுபடுவதற்கான விருப்பத்தை தமிழ் மக்கள் தங்களது தேர்தல்கள் மூலம் வெளிக்காட்டி வருவதை நாம் அவதானிக்கலாம். அந்த வகையில், இறுக்கமான தமிழ் தேசியத்திலிருந்து விடுபட்டு அமையப்போகின்ற அரசாங்கத்தில் அபிவிருத்தியுடன் கூடிய அரசியல் விருப்பத்தினை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றார்களா அல்லது தங்களது இனத்தின் அடையாள அரசியலின் தன்மையை ஆழப்படுத்தி தமிழ் தேசிய கட்டமைப்பை இன்னும் கனதியானதாக மாற்றப்போகின்றார்களா என்பதை இனிவரும் நாட்களில் ஏற்படும் கள நிலவர மாற்றத்தை வைத்தே தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை நாம் அளவிட முடியும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் : நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தனித்துவமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அத்தோடு கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இத்தேர்தலில் மு.காவுடன் இணைந்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று முஸ்லிம் பிரதேசங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தின் கீழ் அபேட்சகர்களை நிறுத்தியுள்ளது. அந்தவகையில் காத்தான்குடியில் பெறியியலாளர் அப்துர் ரஹ்மான் மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான சிப்லி பாறூக் ஏறாவ10ரில் அண்மையில் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்ட அனுபவமிக்க அரசியல்வாதியான அலிசாஹிர் மௌலானா மற்றும் கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் கணக்கறிஞர் எச்.எம்.எம் றியாழ் ஆகியோரை முஸ்லிம் காங்கிரஸ் களத்தில் அபேட்சகர்களாக நிறுத்தியுள்ளது. காத்தான்குடியில் வழமையாக முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிடளவு வாக்குகளை வைத்திருப்பதுடன் இம்முறை 2 நகர சபை உறுப்பினர்களை கொண்டுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்துள்ளது இவ்வமைப்பு கடந்த காத்தான்குடி நகர சபை தேர்தலின் போது 7500 வாக்குகளை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று, தேர்தல் காலத்தில் இடம்பெறும் கட்சித்தாவலும் காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் காங்கிரசின் காத்தான்குடி நகர சபை உறுப்பினரான சல்மா ஹம்சா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடன் இணைந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும் கடந்த காலங்களை விட தற்போதைய களநிலவரத்தின் படி முஸ்லிம் காங்கிரஸ் கூடுதலான வாக்குகளை காத்தான்குடியில் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன. அதே போன்று, ஏறாவூரிலுள்ள அரசியல்வாதிகளில் கூடுதலான வாக்காளர்களை தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் அலிசாஹிர் மௌலானா இம்முறை முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடுகின்றார். அரசியலில் பாராளுமன்றம், மாகாண சபை, நகர சபை, பிரதேச சபை என பல தளங்களில் தனது அரசியல் அனுபவத்தைப் பெற்றதோடு மு.காவில் போட்டியிடும் அபேட்சகர்களில் அலிசாஹிர் மௌலானாவின் பங்கு கனதிமிக்கது. இத்தேர்தலில் ஏறாவூரில் அளிக்கப்படும் வாக்குகளில் 75 வீதமான வாக்குகளை தனித்துவமாக பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியப்பாடு அலிசாஹிர் மௌலானாவுக்கு உண்டு என்பதை களநிலவரம் சுட்டிநிற்கின்றது. கல்குடாவிலிருக்கும் முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரசிக்கு வழமையான வாக்கு வங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த கால தேர்தல்களின் போது மு.கா கடைபிடித்த தேர்தல் உத்திகள் மூலம் இப்பிரதேசத்தில் மு.கா மீதான அதிருப்தி மேலோங்கி இருப்பதுடன், முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்களுடன் எந்தவிதமான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படாமல் இத்தேர்தலில் மு.காவின் தலைவர் தானாக கணக்கறிஞர் றியாழை அபேட்சகராக நிறுத்தியமை உள்ளடங்களான பல விமர்சனங்கள் முஸ்லிம் காங்கிரஸ் மீதிருந்து வருகின்றது. இதன் விளைவாக முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் எம்.பி.எம். ஹுஸைன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மு.காவுக்கெதிரான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதை அவதானிக்கலாம். அத்தோடு முஸ்லிம் காங்கிரசின் முக்கிய செயற்பாட்டாளர்கள் இத்தேர்தலில் அமைதி காப்பதையும் கல்குடாவில் அவதானிக்ககூடியதாகவுள்ளது. எது எப்படியிருப்பினும் மு.கா அபேட்சகரின் நாகரீகமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான மாற்றத்தை நோக்கிய பயணம் அடங்களான தேர்தல் பிரசாரம் என்பவைகளின் ஊடாக முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கியை இத்தேர்தலிலும் தக்கவைக்க வேண்டிய தேவைப்பாடு மு.காவுக்குள்ளது. எனவே, இந்த களநிகழ்வுகளை வைத்து பார்க்கின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பரவலான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. அதே போன்று, இன அடையாள அரசியல் பிரசாரத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா முன்னெடுத்துள்ளதால் அதன் வாக்கு வங்கி அல்லது மு.காவின் தேர்தல் வியூகம் இத்தேர்தலில் சாத்தியப்படுதவற்கான வாய்ப்புக்களை அவதானிக்கலாம். இருந்தாலும் எதிர்வரும் நாட்களில் களநிலவரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மு.காவின் வியூகத்தைக் கேள்விக்குட்படுத்தவும் முடியும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு : முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் முன்னான் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி மற்றும் முன்னாள் மாகாண சபை அமைச்சரும் உறுப்பினருமான சுபைர் ஆகியோர் முக்கியமான அபேட்சகர்களாக மட்டு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவதை அவதானிக்கலாம். நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித்தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டு மாவட்டத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளதை அவதானிக்கலாம். வெற்றிலைச் சின்னத்தின் அடையாளமாகக் காணப்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு மட்டக்களப்பில் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் கனதியான எதிர்ப்பிருந்தும் கூட சுமார் 41631 வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வாக்குகளைப் பெறுவதற்கு மூலதனமாக அமைந்த அரசியல்வாதிகளான ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிள்ளையான் ஆகியோரை இத்தேர்தலிலும் குறைத்து மதிப்பிட முடியாது. கல்குடாத்தேர்தல் தொகுதியில் 10337 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இதில் கூடுதலான வாக்குகள் பிள்ளையானுக்குரியவையாகக் குறிப்படலாம். அதே போன்று, மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 21473 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இதில் கூடுதலான வாக்குகளுக்கு சொந்தக்காரராக ஹிஸ்புல்லாவை குறிப்பிட முடியும். இந்த இரு சக்திகளும் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுவதால் தங்களது விருப்பு வாக்கினை அதிகரிப்பதற்கான போராட்டத்தை நிகழ்த்தும் போது அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குப் பலத்தினை அதிகரிக்கும். அதே போன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மட்டுநகரில் ஒரு ஆசனம் கிடைக்கும் போது, இன அடிப்படையில் தேசியப்பட்டியல் ஆசனமொன்று வழங்கப்படுவதற்கான ஒப்பந்தமொன்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கைசாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மட்டக்களப்பில் போட்டியிடும் அபேட்சகர்கள் மஹிந்தவை பின்னால் வைத்து செயற்பட்டு வருவதாகவும், இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் மஹிந்தவை பலப்படுத்தும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. மஹிந்தவுக்கு மீண்டும் அதிகாரங்களை வழங்கும் போது மீண்டும் முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தளங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் என்ற பிரசாரங்கள் முஸ்லிம்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியில் மஹிந்தவின் ஆட்சியால் தமிழ் இனம் நசுக்கப்பட்ட பிரசாரங்களும் எதிர்தரப்பால் முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டக்களப்பில் ஒரு ஆசனத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். ஐக்கிய தேசிய முன்னணி : இத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி ஆகியோர் அடங்களாக புதிய உபாயங்களை கையாண்டு இன்னும் முக்கியமான பல வேட்பாளர்களும் போட்டியிடுகின்றார்கள். அமையவுள்ள அரசாங்கத்தின் பிரதான கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று தேசிய கட்சிகளில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைக்குரிய கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்துள்ளதை நாம் அவதானிக்கலாம். எனவே, நாம் முன்பு குறிப்பிட்டதைப் போன்று இறுக்கமான தமிழ் தேசிய வாதத்தில் நம்பிக்கையிழந்த தமிழ் வாக்காளர்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பதற்கான சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது ஐ.தே.கட்சியில் மு.கா போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியிருந்தது. அந்த வகையில், ஐக்கிய தேசிய கட்சி பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 890 வாக்குகளையும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 12284 வாக்குகளையும் கல்குடாத்தேர்தல் தொகுதியில் 9090 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 22935 வாக்குகளை பெற்றுக்கொண்டது. இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 12 வீதமான வாக்களிப்புக்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போன்று நடைபெறவுள்ள இத்தேர்தலில் முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி தலைமையில் பட்டிருப்பு தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு குறிப்பிடத்தக்களவு வாக்குகள் அளிக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுவதை அவதானிக்கலாம். அதே போன்று கல்குடா தொகுதியில் பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் ஜெகன் ஆகியோர் அபேட்சகர்களாகவுள்ளதால் கல்குடா தொகுதியிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இத்தேர்தலில் கூடுதலான வாக்களிப்பு இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன. எனவே, நடைபெறவுள்ள இத்தேர்தலில் மட்டு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை ஐக்கிய தேசிய கட்சி பெற வேண்டுமாக இருந்தால் அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குப் பலத்தை விட கூடுதலான வாக்குகளைப் பெற வேண்டும். இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்று இன அடிப்படையிலான தேசியப்பட்டியல் உடன்படிக்கையை ஐக்கிய தேசியக்கட்சி அபேட்சகர்கள் மேற்கொண்டதாகத் தகவல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் : மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் 4 அமையும் போது ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவமாகவும் தமிழ் பிரதிநிதித்துவம் 3 அமையும் போது 2 முஸ்லிம் பிரதிநிதித்துவமாக அமையும். எனவே, இந்த எடுகோலின் அடிப்படையில் நாம் அவதானித்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன அடையாள அரசியல் கட்சியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பார்க்கலாம். இக்கட்சி தனித்து போட்டியிடுவதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் பரவலான வாக்குகள் மு.காவுக்கு இருக்கின்றது. இம்மாவட்டத்தில் 85000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் காணப்படுகின்றார்கள். இன அடிப்படையில் பார்க்கின்ற போது முஸ்லிம்களின் கூடுதலான வாக்குகள் மு.காவுக்கு அளிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி ஆகியோருக்கு இந்த கணக்கில் அரைவாசிப் பகுதியை வழங்கினாலும் மு.காவுக்கான பிரதிநிதித்துவத்திற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக தென்படுகின்றது. இவ்வாறான நிலைமைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ ஐக்கிய தேசிய கட்சிகோ இல்லை. இந்த இரு கட்சிகளிலிருந்து முஸ்லிம் பிரதிநிதித்துவம் தெரிவு செய்யப்பட வேண்டுமாக இருந்தால் அக்கட்சிகளுக்கு தமிழ் வாக்குகள் முக்கியமாக காணப்படுகின்றது. இதனை இன்னுமொரு வார்த்தையில் குறிப்பிடுவதென்றால் பிள்ளையான் அல்லது கணேசமூர்த்தி ஆகியோரின் கையில் தான் இருக்கிறது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் அடைவு. எனவே, இன அடையாள அரசியல் பிரதிபலிப்பினூடாக மு.காவிலிருந்து பிரதிநிதித்துவம் சாத்தியமாகவுள்ளதாக களநிகழ்வுகள் காட்டுகின்றது. அவ்வாறு மு.காவுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தால் அது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சம கால அரசியல் களநிலவரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. காத்தான்குடியில் அப்துர் ரஹ்மானும் ஏறாவூரில் அலிசாஹிர் மௌலானாவும் கல்குடாவின் முஸ்லிம் பிரதேசங்களில் ரியாழும் என்ற தெரிவுக்கு மத்தியில் இதில் யார் தெரிவு செய்யப்படுவார்கள்? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இந்த ஊர்களின் களநிலவரத்தை அலச வேண்டியுள்ளது. காத்தான்குடியில் இரு அபேட்சகர்கள் போட்டியிடுவதால் அவர்கள் தங்களது தனித்துவத்தை விருப்பு தெரிவின் மூலம் நிரூபிக்க தலைப்படுவார்கள். குறிப்பாக அப்துர் ரஹ்மான் தனது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வாக்குப் பலத்தின் கனதியை அதிகரிக்கப் போராடும் அதே வேளை, சிப்லி பாறூகும் தனது தனித்துவ வாக்கு வங்கியை வெளிக்காட்டுவார். இந்த நிகழ்வுகள் தற்போது காத்தான்குடியில் நிகழ்ந்து வருவதை நாம் அவதானிக்கலாம். இதனால் விருப்புத் தெரிவு போராட்டமானது பிரதிநிதித்துவத் தெரிவின் கனதியை காத்தான்குடியில் குறைத்து விடுவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை நாம் எதிர்வு கூறலாம். ஏறாவூறைப் பொறுத்த வரை தற்போது நிகழும் களநிலவரம் அங்கு தொடர்ந்து நிகழுமாயின் அளிக்கப்படும் வாக்குகளில் பெருமளவான வாக்குகளை அலிசாஹிர் மௌலான பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்றது. அத்தோடு, மு.காவில் போட்டியிடும் அபேட்சகர்களில் அரசியல் அனுபவமிக்க அரசியல்வரியாக இவர் இருப்பதால் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து மௌலானாவுக்கான விருப்பத் தெரிவுகள் அளிக்கப்படுதவற்கான களநிலவரங்கள் காணப்படுகின்றன. கல்குடாவின் முஸ்லிம் பிரதேசங்களில் கடந்த காலங்களில் மு.காவுக்கான குறிப்பிடளவான வாக்களிப்பு வீதம் இடம்பெற்று வருவதை கடந்த காலத்தேர்தல் முடிவுகள் மூலம் நாம் அவதானிக்கலாம். 2010 இல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் 9090 வாக்குகளும் 2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது 8604 வாக்குகளும் கல்குடாத் தொகுதியின் முஸ்லிம் பிரதேசங்களில் மு.காவுக்காக அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கு வங்கியை தக்கவைப்பதோடு, மு.காவில் போட்டியிடும் எச்.எம்.எம். ரியாழ் தனது தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் வழமையாக மு.காவுக்கு கல்குடா தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளில் 50 வீதமான வாக்குகளை கூடுதலாக சம்பாதிக்கும் போது மு.காவின் பிரதிநிதித்துவம் கல்குடாவுக்கு கிடைப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், களநிலவரத்தின் படி இந்த இரு அம்சங்களும் கல்குடாத்தொகுதியில் மந்தகதியிலே இடம்பெற்று வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. எனவே, நாம் அவதானித்த படி மு.காவின் களநிலவரம் மட்டு நகரில் தொடரப்படுமாயின் மு.கா ஊடாக பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவதற்கான அதிகளவான சாத்தியப்பாடுகள் ஏறாவூர் அபேட்சகருக்கே அதிகமான சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன. ஆகவே, மு.காவிலிருந்து தெரிவாகும் பிரதிநிதித்துவம் ஏறாவூராக இருக்கும் என்ற தெரிவுக்கு இந்த கள ஆய்விலிருந்து நாம் வரமுடியும். தேசிய கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் : தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 ஆசனங்களிலிருந்து 3 ஆசனங்களை மாத்திரமே பெறுமாக இருந்தால், மீதி இரண்டு ஆசனங்கள் முஸ்லிம் பிரதிநிதித்துவமாக அமைவதற்கான சாத்தியப்பாடு அதிகமாக தென்படுகின்றன. இதன்படி ஒரு ஆசனம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு செல்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதை நாம் மேலே பார்த்தோம். மீதி ஒரு ஆசனம் தேசிய கட்சிகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, அந்த ஆசனம் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கா அல்லது ஜக்கிய தேசிய கட்சிக்கா என்பது தான் அடுத்துள்ள முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கான போட்டியாக இருக்கும். நாம் மேலே குறிப்பிட்டது போன்று தேசிய கட்சிகளின் ஊடாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்கவேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களின் வாக்களிப்பும் தேசிய கட்சிகளுக்கு முக்கியமானதாகும். இந்த அடிப்படையில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் எந்த தேசிய கட்சிக்கு தமிழ் மக்கள் தங்களது பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள் என்பதையும் இரு தேசிய கட்சிகளிலும் போட்டியிடும் தமிழ் அபேட்சகர்களில் யாருக்கு தமிழ் மக்களின் செல்வாக்கு அதிகமாக காணப்படுகின்றது என்பதை வைத்து பார்க்கும் போது தேசிய கட்சிகளினூடாக கிடைக்கப்பெறும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் யாராக இருக்கும் என்பதை இக்கட்டுரையிலுள்ள தகவல்களை வைத்து வாசகர்கள் ஊகித்துக் கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top